63:3778 அன்சாரிகளின் சிறப்புகள்

3778. அனஸ்(ரலி) அறிவித்தார். 
மக்கள் வெற்றியடைந்த ஆண்டில் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) நபி(ஸல்) அவர்கள் (அன்சாரிகளுக்கு வழங்காமல், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்கா குறைஷிகளுக்கு கொடுத்தபோது அன்சாரிகள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மையில், இது வியப்பாகத் தான் இருக்கிறது. எங்கள் வாட்களில் குறைஷிகளின் இரத்தம் கொட்டிக் கொண்டிருக்க, எங்கள் போர்ச் செல்வங்கள் அவர்களுக்கல்லவா கொடுக்கப்படுகின்றன?’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டது. நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை அவர்கள் அழைத்து, ‘உங்களைப் பற்றி எனக்கெட்டிய செய்தி என்ன?’ என்று கேட்டார்கள். அவர்கள் (நபித் தோழர்கள்) பொய் சொல்லாதவர்களாய் இருந்தனர். எனவே, அவர்கள், ‘(உண்மையில் நாங்கள் பேசிக் கொண்டதும்) உங்களுக்கு எட்டியதே தான்’ என்று பதிலளிதார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘மக்கள் போர்ச் செல்வங்களைப் பெற்றுக் கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல, நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்து சென்றால் அவர்கள் செல்கிற பள்ளத்தாக்கிலோ கணவாயிலோ தான் நானும் நடந்து செல்வேன்’ என்று கூறினார்கள். 
Book :63