52:2640 சாட்சியங்கள்

பாடம் : 4 ஒருவரோ பலரோ ஒரு விஷயத்திற்கு சாட்சியம் அளித்திருக்க, மற்ற சிலர் வந்து, இதை நாங்கள் அறிய மாட்டோம் என்று கூறினால் (முத-ல்) சொன்னவர்களின் சாட்சியத்தை வைத்தே தீர்ப்பளிக்கப்படும். இது (எப்படியென்றால்) பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) கஅபாவினுள் தொழுதார்கள் என்று செய்தியறிவிக்க, ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழவில்லை என்று கூறிய போது, பிலால் (ரலி) அவர்களின் சாட்சி யத்தையே மக்கள் ஏற்றுக் கொண்டதைப் போன்றதாகும் என்று ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறே, இன்னாருக்கு இன்னாரி டமிருந்து ஆயிரம் திர்ஹங்கள் (கடன் தொகை) வரவேண்டியள்ளதுஎன்று இருவர் சாட்சியமளித்து, வேறு இருவர், இரண்டாயிரம் திர்ஹம்கள் வர வேண்டியுள்ளது என்று சாட்சியம் அளித்தால் (இரு தொகைகளில்) அதிகமான தொகை எதுவோ அதைச் செலுத்தும்படியே தீர்ப்பு வழங்கப்படும். 
2640. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். 
நான் அபூ இஹாப் இப்னு அஸீஸ் அவர்களின் மகளை மணந்துகொண்டேன். ஒரு பெண் என்னிடம் வந்து, ‘உனக்கும் நீ மணந்த பெண்ணுக்கும் நான் பாலூட்டியிருக்கிறேன்’ என்று கூறினாள். நான், ‘நீ எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணந்தபோது) நீ எனக்கு (இதை) அறிவிக்கவில்லையே’ என்று கூறிவிட்டு, அபூ இஹாபின் குடும்பத்தாரிடம் (இது உண்மை தானா என்று) கேட்டனுப்பினேன். அவர்கள், ‘எங்கள் பெண்ணுக்கு அவள் பாலூட்டியதாக நாங்கள் அறியவில்லை’ என்று கூறினர். உடனே (மக்காவில் இருந்த) நான், மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களிடம் (மார்க்கத் தீர்ப்புப் பெறுவதற்காக) பயணித்துச் சென்று அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித் தாயிடம் பால்குடித்தாகச்) சொல்லப்பட்டுவிட்ட பின்னால், (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?’ என்று கூறினார்கள். எனவே; நான் அவளைப் பிரிந்துவிட்டேன். அவள் வேறொரு கணவனை மணந்தாள். 
Book : 52