47:2484 கூட்டுச் சேருதல்

2484. ஸலமா(ரலி) அறிவித்தார். 
(ஹவாஸின் போரில்) மக்களின் பயண உணவு தீர்ந்து போய்ப் பஞ்சத்திற்குள்ளானார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (புசிப்பதற்காகத்) தங்கள் ஒட்டகங்களை அறுக்க அனுமதி கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். (வழியில்) அவர்களை உமர்(ரலி) சந்திக்க, மக்கள் அவர்களுக்கு (நடந்த விஷயத்தை)த் தெரிவித்தார்கள். அதற்கு உமர்(ரலி), ‘உங்கள் ஒட்டகங்களை அறுத்து (உண்டு)விட்ட பிறகு நீங்கள் எப்படி உயிர் வாழ்வீர்கள்?’ என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! மக்கள் தங்களின் ஒட்டகத்தை அறுத்து (உண்டு)விட்ட பிறகு அவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்?’ என்று கேட்டார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மக்கள் தங்கள் பயண உணவில் எஞ்சியதைக் கொண்டு வரும்படி அவர்களிடையே அறிவிப்புச் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அறிவிப்புச் செய்யப்பட்டு, மக்கள் தங்கள் எஞ்சிய உணவைக் கொண்டு வந்து போடுவதற்காக ஒரு தோல் விரிப்பு விரித்து வைக்கப்பட்டது. மக்கள் அதில் தங்கள் எஞ்சிய உணவுகளை (குவியலாக) வைத்துவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்து அதில் பரக்கத்தை அளிக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டினார்கள். 
பிறகு, தங்கள் பாத்திரங்களைக் கொண்டு வரும்படி மக்களை அழைத்தார்கள். மக்கள், தங்கள் இரண்டு கைகளையும் குவித்து (உணவில் தங்களின் பங்கைப்) பெற்றார்கள். 
அனைவரும் உணவைப் பெற்ற பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை என்றும் நான் இறைத்தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்’ என்றார்கள். 
Book :47