3:59 கல்வியின் சிறப்பு

பாடம் : 1 கல்வியின் சிறப்பும் உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்விஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான் எனும் (58:11ஆவது) இறை வசனமும். வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் கூறுகின்றான்: என் இறைவா! கல்விஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக! என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக! (20:114). பாடம் : 2 ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது யாராவது ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேள்விகேட்டால், அவர் தம் பேச்சை முடித்துக்கொண்டு, பிறகு கேள்வி கேட்பவருக்கு பதிலளிக்கலாம். 
59. ‘ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். ‘மறுமை நாள் எப்போது?’ எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் ‘நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை’ என்றனர். வேறு சிலர், ‘அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை’ என்றனர். முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, ‘மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?’ என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)’ இறைத்தூதர் அவர்களே! இதோ நானே’ என்றார். அப்போது கூறினார்கள்.’ அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.’ அதற்கவர், ‘அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?’ எனக் கேட்டதற்கு, ‘எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
Book : 3