34:2047 வியாபாரம்

பாடம் : 101 இறந்துபோன மிருகத்தின் பதப்படுத்தப்படா தோல்கள். 
2047. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
‘அபூ ஹுரைராவின் ஹதீஸ் அளவிற்கு முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் ஏன் அறிவிப்பதில்லை? அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே!’ என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் ‘என் வயிறு நிரம்பினால் போதும்’ என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன்! என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார்!’ எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை!’ 
Book : 34