31:2010 தராவீஹ் தொழுகை

2010. அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) ‘இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!’ என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) ‘இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!’ என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர். 
இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார். 
Book :31