29:1870 மதீனாவின் சிறப்புகள்

1870. அலீ(ரலி) அறிவித்தார். 
‘அல்லாஹ்வின் வேதத்தையும் நபியவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறு எதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை! (இந்த ஏட்டில் உள்ளதாவது); ‘ஆயிர் என்ற மலையிலிருந்து இன்ன இடம் வரை மதீனா புனிதமானதாகும். இதில் யாரேனும் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்தினால் அல்லது அவ்வாறு ஏற்படுத்துபவருக்கு அடைக்கலம் தந்தால், அல்லாஹ்வின் – வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் அவன் மீது ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம். உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது! முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றே! (அது, மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகக் கருதப்படவேண்டியதே)யாகும்! ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை யாரேனும் முறித்தால் அவன் மீது அல்லாஹ், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் ஏற்படும்! அவனிடமிருந்து அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது! விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன், தன்(னை விடுதலை செய்த எஜமானர்களான) காப்பாளர்களின் அனுமதியின்றி, பிறரைத் தன் காப்பாளராக ஆக்கினால் அவன் மீதும் அல்லாஹ்வின்… வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம், உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது!’ 
Book :29