26:1775 உம்ரா – OnlineTNTJ

26:1775 உம்ரா

பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள் எத்தனை? 
1775. முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறினார்: 
நானும் உர்வா இப்னு ஸுபைரும் மஸ்ஜிது(ன் நபவீ)க்குச் சென்றோம். அங்கே ஆயிஷா(ரலி) அவர்களின் அறைக்கருகே அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் மஸ்ஜிதில் ளுஹா தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களிடம் மக்களின் இந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கவர்கள், ‘இது பித்அத்!’ என்றார்கள்! (காரணம் இப்னு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் ளுஹா தொழுததைப் பார்த்ததில்லை). பிறகு, ‘நபி(ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?’ என உர்வா(ரஹ்) கேட்டார்கள். அதற்கவர்கள் ‘நான்கு, அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்!’ என்றார்கள். 
நாங்கள் அவர்களின் இக்கூற்றை மறுக்க விரும்பவில்லை. 
இதற்கிடையே அறையில் உம்முல் மூமினீன் ஆயிஷா(ரலி) பல்துலக்கும் சப்தத்தைக் கேட்டோம் அப்போது உர்வா(ரஹ்), ‘அன்னையே! இறைநம்பிக்கையாளர்களின் தாயே! அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு உமர்(ரலி)) அவர்கள் கூறுவதைச் செவியேற்றீர்களா?’ எனக் கேட்டார். ‘அவர் என்ன கூறுகிறார்?’ என ஆயிஷா(ரலி) கேட்டதும். ‘நபி(ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள். அவற்றில் ஒன்று ரஜப் மாதத்தில் நடந்தது!’ என்று கூறுகிறார்!’ என்றார். ஆயிஷா(ரலி), ‘அபூ அப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்யும் போதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார்; (மறந்துவிட்டார் போலும்!) நபி(ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ததே இல்லை!’ எனக் கூறினார்கள். 
Book : 26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *