21:1198 தொழுகையில் செய்யும் பிற செயல்கள்

பாடம் : 1 தொழுகையுடன் சம்பந்தப்பட்ட காரியங்களில் கைகளைப் பயன்படுத்தலாம். ஒருவர் தொழும் போது தமது உடலில் எந்தப் பகுதியையும் பயன்படுத்தலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் தொழும் போது தமது தொப்பியைக் கழற்றியும் மாட்டியும் இருக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள் தொழும் போது தமது மேனியில் சொரிந்துகொள்ளும் நேரம் அல்லது தமது ஆடையைச் சரி செய்துகொள்ளும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தமது கையை இடக்கை மணிக்கட்டில் வைத்திருப்பார்கள். 
1198. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
என் சிறிய தாயார் மைமூனா(ரலி)யின் வீட்டில் ஓர் இரவு தங்கினேன். ஒரு தலையணையின் அகலப்பகுதியில் படுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவி (மைமூனா)வும் அந்தத் தலையணையின் நீளப்பகுதியில் படுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். தம் கையால் தம் முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தை விலக்கிவிட்டு ‘ஆல இம்ரான்’ அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை ஓதினார்கள். பிறகு தொங்க விடப்பட்ட தோல் பாத்திரத்தை நோக்கிச் சென்று அதிலிருந்து அழகிய முறையில் உளூச் செய்து தொழலானார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்தது போன்றே செய்து, அவர்களின் (இடது) விலாப் புறத்தில் நின்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலது கரத்தை என் தலைமீது வைத்து என்னுடைய வலது காதைப் பிடித்து (வலது புறத்திற்கு) திருப்பினார்கள். இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள் மேலும் இரண்டு ரக்அத்கள் இன்னும் இரண்டு ரக்அத்கள், பிறகு இரண்டு ரக்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் வித்ரு தொழுதுவிட்டுப்படுத்தார்கள். முஅத்தின் வந்ததும் எழுந்து சிறிய அளவில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (பள்ளிக்குப்) புறப்பட்டு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். 
Book : 21