15:1007 மழை வேண்டுதல்

1007. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிக்கக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘யூஸுஃப் நபி காலத்து ஏழாண்டுப் பஞ்சம் போல் இவர்களுக்கு ஏழாண்டுப் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!’ என்று பிரார்த்தித்தனர். அவர்களுக்குப் பஞ்சம் ஏற்படுத்துவாயாக! என்று பிரார்த்தித்தனர். அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு அனைத்தையும் வேரறுத்தது. தோல்கள், பிணங்கள் ஆகியவற்றை உண்ணலானார்கள். அவர்கள் (மழை மேகம் தென்படுகிறதோ என்று) வானத்தைப் பார்க்கும்போது பசியினால் புகை மூட்டத்தையே காண்பார்கள். இந்நிலையில் அபூ ஸுப்யான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே! நீர் இறைவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் உறவினர்களோடு இணைந்து வாழ வேண்டுமென்வும் கூறுகிறீர். உம்முடைய கூட்டத்தினரோ அழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யும்’ என்று கூறினார். அப்போது பின்வரும் வசனங்களை அல்லாஹ் கூறினான். 
‘எனவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர்பாரும்! 
(அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும் ‘இது நோவினை செய்யும் வேதனையாகும். 
எங்கள் இறைவனே! நீ எங்களைவிட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கிறோம்’ (எனக் கூறுவர்). 
நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம் பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கிறார்கள். 
அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி ‘(மற்றவர்களால் இவர்) கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்’ எனக் கூறினர். 
நிச்சயமாக! நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புவர்களே. 
ஒரு நாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழிதீர்ப்போம்’. (திருக்குர்ஆன்: 44:10-16) 
கடுமையான பிடி என்பது பத்ருப் போரில் ஏற்பட்டது புகை மூட்டமும் கடுமையான பிடியும் நடந்தேறியது. அதுபோல் ரூம் அத்தியாயத்தில் கூறப்பட்ட முன்னறிவிப்பும் நிறைவேறியது. 
Book :15